கோவில் மாடுகளை பூஜாரிக்கு வழங்க கோரிக்கை விடுப்பு!
நாமக்கல்: அறநிலையத்துறை கோவிலுக்கு விடப்படும் மாடுகளை, பூஜாரிகளுக்கு வழங்க வேண்டும் எனக்கோரி, பூஜாரிகள் சங்கத்தினர், குறைதீர் கூட்டத்தில், மனு வழங்கினர்.தமிழ்நாடு பூஜாரிகள் நலச்சங்கத்தின், மாநில தலைவர் வாசு தலைமையிலான பூஜாரிகள், நேற்று, மக்கள் குறைதீர் கூட்டத்தில் கொடுத்த, புகார் மனுவில் கூறியிருப்பதாவது:இந்து சமய அறநிலையத் துறை கோவில்களுக்கு, பக்தர்களால் விடப்படும் மாடுகள், அந்தந்த பகுதி பூஜாரிகளுக்கு வழங்க, அறநிலையத் துறை ஆணையர், கடந்த, அக்டோபர் மாதம் உத்தரவிட்டார்.ராசிபுரம் அடுத்த உரம்பு வரதராஜ பெருமாள் கோவிலில், சில தினங்களுக்கு முன் நடந்த விழாவில், 50க்கும் மேற்பட்ட மாடுகளை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். அந்த மாடுகளை, பூஜாரிகளுக்கு வழங்கக்கோரி, செயல் அலுவலர் ராஜாராமிடம் கேட்டோம்.அதற்கு அவர், விழா கமிட்டியிடம்தான் கேட்க வேண்டும் என தெரிவித்துவிட்டார். அதற்கு, ஆய்வாளர் உமாதேவியும் ஆதரவு தெரிவித்து வருகிறார். இருவரும் சேர்ந்து, கோவிலுக்கு தானமாக கொடுக்கப்படும் மாடுகளை விற்றுவிடுகின்றனர்.எனவே, ஆணையாளர் உத்தரவுபடி, கோவில் மாடுகளை, பூஜாரிகளுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.