மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று இரண்டாம் நாள் திருவிழாவில் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனுக்காக அக்னி சட்டி எடுத்து வழிபட்டனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தொலைவில் மஞ்சலாற்றங்கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலஸ்தானம் என்னும் குச்சிவீட்டின் கதவு திறக்கப்படுவது இல்லை. அடைக்கப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. பக்தர்கள் வழங்கும் நெய்யினால் ஆண்டு முழுவதும் இரவு, பகல் அணையாத நெய்விளக்கு எரிகிறது. இக்கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா நேற்று முன்தினம் ராஜகம்பளத்தாரின் தேவராட்டத்துடன் பள்ளயம் ஆலயம் வந்தது. சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடந்தது. இவ்விழாவில் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய விடிய கண்விழித்து விரதம் இருந்து அம்மனை தரிசனம் செய்தனர். 2 நாள் நேற்று காலையில் இருந்து பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக மஞ்சளாற்றங்கரையில் அக்னி வளர்த்து சட்டி ஏந்தி அம்மனுக்கு செலுத்தினர்.