அம்மன் பீடத்தில் மகா அபிஷேகம்
மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் தாலுகா சிறுகனூர் அருகே சி.ஆர்.பாளையத்தில் உள்ள ஸ்ரீவனதுர்க்கை அம்மன் சக்தி பீடத்தில், 10ம் ஆண்டு மகா அபிஷேக குடமுழுக்கு விழா நடந்தது. குடமுழுக்கு விழா துவக்க நிகழ்ச்சியாக பஞ்சமுக விநாயகர், வன துர்க்கையம்மன், ஊமைபிடாரி அம்மன், சப்த கன்னிமார்கள், வரு ஆஞ்சநேயர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கங்கனம் கட்டும் நிகழ்ச்சி ஃபிப்., 23ம் தேதி நடந்தது. மார்ச் முதல் தேதி கணபதி ஹோமமும், அம்மனுக்கு அக்னிசட்டி, பால்குடம், முளைப்பாரி, தீர்த்தம் எடுத்து வந்து படிபூஜை அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இரண்டாம் தேதி அபிஷேக ஆராதனை, மா விளக்கு பூஜை, கிடாவெட்டு பூஜையும் நடந்தது. கோவில் பூசாரியார் மகேஸ்வரன் பூஜைகளை நடத்தி வைத்தார். விழாவில் கோவில் பூஜாரிகள் சங்க மாநில தலைவர் வாசு, சிறுகனூர் பஞ்., தலைவர் ரமேஷ், ஆடிட்டர் ரமேஷ், வழக்கறிஞர் பிரகாஷ் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஆன்மிகம் மற்றும் சமூக அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.