உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில், மசூதி, தேவாலயங்களில் தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை!

கோவில், மசூதி, தேவாலயங்களில் தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை!

சேலம்: லோக்சபா தேர்தலையொட்டி, அரசு மற்றும் தனியார் சுவர்களில், விளம்பரம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோவில், மசூதி, தேவாலயங்களில் பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற கண்டிப்பான உத்தரவும் போடப்பட்டுள்ளது. மீறி செயல்படும் அரசியல் கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் கலெக்டரும், தேர்தல் அலுவலருமான மகரபூஷணம் வெளியிட்ட அறிக்கை: லோக்சபா தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மார்ச், 29ல், மனுத்தாக்கலும், ஏப்ரல், 5ல், மனுத்தாக்கலுக்கான கடைசி நாள், 7ம் தேதி மனுக்கள் மீது பரிசீலனை, 9ம் தேதி திரும்ப பெறுதல், 24ம் தேதி ஓட்டுப்பதிவு, மே, 16ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தலையொட்டி நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, பிரச்சாரம் செய்யும்போது, எந்த ஒரு மதத்தினரையோ, சமய அல்லது மொழி வேறுபாடுகளை தூண்டி விடும் வகையில் பேசக்கூடாது.கட்சி வேட்பாளர்கள், தலைவர்கள், தொண்டர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனம் செய்யக்கூடாது. வழிபாட்டுக்குரிய இடங்களான, மசூதிகள், மாதா கோவில், இந்து கோவில்களில் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !