கோவில் விழா: டெண்டர் கோர தடை!
திருப்பூர்: தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளதால், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் டெண்டர் கோர, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு துறை அலுவலகங்களில் புதிய டெண்டர் பணிகள், நியமனங்கள் மேற்கொள்ளக்கூடாது என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்திலுள்ள பெரும்பாலான கோவில்களில், ஏப்., மே மாதங்களில் திருவிழா, சித்திரை திருவிழாக்கள் நடக்கும். திருவிழாவுக்கு பந்தல் அமைப்பது, மின் விளக்கு, ஒலி பெருக்கி, சுவாமிகளுக்கு பூ மாலை உள்ளிட்ட பூஜை பொருட்கள் வாங்க டெண்டர் கோரப்படும். திருவிழா கடைகள், ஏலம் மற்றும் டெண்டர் நடைமுறைகள் மூலமாக வழங்கப்படும்.தேர்தல் நடைமுறைக்கு அமலுக்கு வந்துள்ளதால், திருவிழாக்கள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டெண்டர், ஏலம் உள்ளிட்ட எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது; டெண்டர் படிவங்கள் பெற்றிருந்தாலும், திறக்கக்கூடாது; யாருக்கும் எந்த அனுமதியும் வழங்கக்கூடாது என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதால், கோவில் திருவிழா நடைமுறைகள் பாதித்துள்ளன.அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:அனைத்து கோவில்களிலும் திருவிழா நடைமுறைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழா குறித்து, டெண்டர் பணி நிறுத்தம் காரணமாக ஏற்படும் பாதிப்பு குறித்தும், தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.கோவில்களில் நடக்கும் வழக்கமான நடைமுறை என்பதால், கடந்த காலங்களில், தேர்தல் கமிஷன் அனுமதி கொடுத்துள்ளது; அனுமதி கிடைத்தவுடன், பணிகள் துவங்கும் அல்லது திருவிழாக்களை நடத்த வேறு வழிமுறை உள்ளதா என்பது குறித்து உயரதிகாரிகள் முடிவு செய்வர். தேர்தல் நடைமுறை காரணமாக, கோவில் திருவிழாக்கள் பாதிக்காது. இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.