ராமேஸ்வரம் கோயிலில் பாலாலய பூஜை!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் துவக்குவதற்காக, நேற்று பாலாலய பூஜை நடந்தது.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம், இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், விநாயகர் சன்னதி உள்ளிட்ட 21 சன்னதிகளின் விமானங்கள், கிழக்கு, மேற்கு ராஜகோபுரத்திற்கு திருப்பணி நடத்த, நேற்று முன்தினம் கோயிலில் முதல்கால யாக பூஜை துவக்கி, நேற்று காலை 2ம் கால யாக பூஜை, கஜ பூஜை, கோ பூஜை நடந்தது.பின். பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் ராமேஸ்வரம் கோயில் குருக்கள் கணபதி ராம், 27 சிவாச்சாரியார்கள் மந்திரம் முழங்க, புனித கலசங்களில் பூர்ணாகுதி, மகா தீபாராதனை, பாலாலய பூஜை நடந்தது. கோயில் கமிஷனர் செல்வராஜ், தக்கார் குமரன் சேதுபதி, பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளீதரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.