விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ப.வேலூர்: ப.வேலூர் அடுத்த பொத்தனூரில், மிகுந்த பொருட்செலவில், புதிதாக விநாயகர், மஹா மாரியம்மன் கோவில் திருப்பணி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று கும்பாபிஷே விழா நடத்தப்பட்டது.கடந்த, 7ம் தேதி மாலை, 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, புண்யாகவாசனம், மகா ஹோமம், பிரவேச பூஜையும், 20,000 பக்தர்கள், காவிரி ஆற்றுக்குச் சென்று தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.அதை தொடர்ந்து, வாஸ்துசாந்தி, பூர்ணாகுதி, தீபாராதனையும், விக்னேஸ்வர பூஜை, யாகசாலை அலங்காரம், புதிய விக்ரகங்களுக்கு அஷ்ட தியாவணி, பூர்வாங்க பூஜை, முதற்காலம், இரண்டாம் காலம், மூன்றாம் கால யாகபூஜை நடந்தது. நேற்று காலை, 9 மணிக்கு, கலசங்கம் புறப்பாடு, 10 மணிக்கு விநாயகர், மஹா மாரியம்மன் கோவில் விமானங்களுக்கு கும்பாபி÷ஷகமும், 10.15 மணிக்கு, மூலாலய மகா கும்பாபிஷேகமும் கோலாகலமாக நடந்தது. அதை தொடர்ந்து, மஹா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், ஸ்வாமி தரிசனமும் நடந்தது. நிகழ்ச்சியில், தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி, எம்.எல்.ஏ., தனியரசு, அ.தி.மு.க., லோக்சபா வேட்பாளர் சுந்தரம், தி.மு.க., வேட்பாளர் காந்திச்செல்வன், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.