உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிறைவு பெற்றது கச்சத்தீவு திருவிழா: 6,000 பக்தர்கள் பங்கேற்பு!

நிறைவு பெற்றது கச்சத்தீவு திருவிழா: 6,000 பக்தர்கள் பங்கேற்பு!

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவில், இந்தியா, இலங்கையை சேர்ந்த 6,000 பக்தர்கள் பங்கேற்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து 22 கி.மீ., தொலைவில் உள்ள கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவை இந்திய, இலங்கை மீனவர்கள் பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர். கடந்த 1983 ல், இலங்கையில் இனப்போர் தீவிரமானதால், கச்சத்தீவு விழாவுக்கு, இலங்கை அரசு தடைவிதித்தது. இலங்கையில் அமைதி திரும்பியதும், 2010 ஆண்டு முதல், விழா நடக்கிறது. நேற்று முன்தினம், ராமேஸ்வரத்தில் இருந்து 95 விசைப்படகுகளில் இந்திய பக்தர்கள் 3,160 பேர் கச்சத்தீவு புறப்பட்டனர். இதே போல, இலங்கை நெடுந்தீவு, மன்னார், பேசாளை, யாழ்ப்பாணத்தை சேர்ந்த 3,000 பேர் விழாவு வந்தனர். நேற்று முன்தினம் மாலை, நெடுந்தீவு பாதிரியார் அமல்ராஜ், கொடி ஏற்றி வைத்தார்; அன்று இரவு, சிலுவைப் பாதை பூஜை, திருப்பலி நடத்தினார். இரவில், அந்தோணியார் தேர்பவனியுடன், முதல் நாள் விழா முடிந்தது. இரண்டாம் நாளான நேற்று காலை, யாழ்ப்பாணம் மறை மாவட்ட முதன்மைகுரு ஜஸ்டின் ஞானபிரகாசம் தலைமையில், ராமேஸ்வரம் பாதிரியார் சகாயராஜ், சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் முதன்மை குரு அமல்ராஜ், இலங்கை பாதிரியார்கள் இணைந்து, திருப்பலி நடத்தினர். காலை 9.30 மணிக்கு, திருவிழா கொடியை இறக்கி வைத்த நெடுந்தீவு பாதிரியார் அமல்ராஜ், விழாவை முடித்து வைத்தார். விழாவில், இலங்கை ராணுவம், கடற்படை உயர்அதிகாரிகள் பங்கேற்றனர். காலை 9.50 மணிக்கு, இந்திய பக்தர்கள் படகுகளில் புறப்பட்டு, காலை 11.45 மணி முதல், ராமேஸ்வரம் கரைக்கு வரத்துவங்கினர்.

இதுகுறித்து, ராமேஸ்வரம் பாதிரியார் சகாயராஜ் கூறுகையில்
, ""இருநாட்டு பக்தர்களும் உற்சாகத்துடன் பங்கேற்று, புனிதரின் ஆசி பெறும் இடம் கச்சத்தீவு தான். உணவு, குடிநீரை பரிமாறிக் கொண்டு, பிரிந்த உறவினர்களை சந்திப்பது போன்ற உணர்வை இருநாட்டினரும் வெளிப்படுத்தினர், என்றார்.

கச்சத்தீவிலும் மோடி அலை!: இந்திய பக்தர்களின் பாதுகாப்பிற்காக, கடலில் இந்திய, தமிழக கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மார்ச் 15 இரவு முழுவதும், இலங்கை கடற்படை ரோந்து கப்பல்கள், கச்சத்தீவை சுற்றி வந்தனர். கச்சத்தீவில் அமைக்கப்பட்டிருந்த, "சிலோன் வங்கி யில், தமிழக பக்தர்கள் ரூபாயை கொடுத்து, இலங்கை பணத்தை (ரூபாய்) மாற்றி, சோப்பு, எண்ணெய், பொம்மைகள் வாங்கினர். இலங்கை பணத்தில், டீ- 40 ரூபாய்; தோசை, புரோட்டா- தலா 50 ரூபாய் விற்கப்பட்டது. இலங்கை கடற்படை சார்பில் பக்தர்களுக்கு, மீன் குழம்பு சாப்பாடு, பிரட், ஜாம், பிஸ்கட், குளிர்பானம் வழங்கப்பட்டது. கச்சத்தீவு விழாவில் பங்கேற்ற இலங்கை பக்தர்கள், இந்தியாவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் யார் பிரதமர் ஆவார்கள் என, ஆவலுடன் தமிழக பக்தரிடம் கேட்டுள்ளனர். அதற்கு, இந்தியா முழுவதும் மோடி அலை தான் வீசுவதால், அவர் தான் பிரதமராக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்ததும், அவர்கள் மகிழ்ச்சி அடைந்ததாக, ராமேஸ்வரம் திரும்பிய தமிழக பக்தர்கள் தெரிவித்தனர். ராமேஸ்வரம் சகாயராஜ் என்பவரது படகில் பலகை உடைந்து, மார்ச் 15 ம் தேதி இரவு கச்சத்தீவு அருகே கடலில் மூழ்கியது. அதில் சென்ற பக்தர்கள் 33 பேரும், மற்றொரு படகில் ஏறி கரை வந்தனர். ஓரிரு தினங்களில் மூழ்கிய படகை மீட்க, மீனவர்கள் குழு கச்சத்தீவுக்கு செல்ல உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !