தடைகளை தகர்த்த ஹோலி கொண்டாட்டம்!
பிருந்தாவன்:சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி., மாநிலம், பிருந்தாவனில் நடந்த, "ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில், முதல் முறையாக, 2,000க்கும் மேற்பட்ட விதவைகள் பங்கேற்றனர். ஒருவர் மீது ஒருவர், வண்ணப் பொடிகளை தூவியும், வண்ண நீரை பீய்ச்சி அடித்தும், கவலைகளை மறந்து, உற்சாகமாக, ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.
துவக்கம்: வட மாநிலங்களில், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக, ஆண்டு தோறும், மார்ச் மாதத்தில், ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கொண்டாட்டம், இன்று துவங்கி, பல நாட்கள் நடக்கிறது.இந்த கொண்டாட்டத்தின்போது, அனைத்து தரப்பினரும், ஒருவர் மீது ஒருவர், வண்ணப் பொடிகளை தூவியும், வண்ண நீரை பீய்ச்சி அடித்தும், மகிழ்ச்சி யை வெளிப்படுத்துவர்.இந்த பண்டிகையில், பெரும்பாலும், விதவை பெண்கள், அனுமதி அளிக்கப்படுவது இல்லை. பார்வையாளர்களாக கூட, அவர்களை பங்கேற்க அனுமதிப்பது இல்லை. இந்த பிரச்னைக்கு, "சுலப் என்ற, தன்னார்வ தொண்டு நிறுவனம், தீர்வு காண முயற்சித்தது.
ஏக்கம் தீர்ந்தது: காலம், காலமாக, விதவைகளின் அடிமனதில் படிந்துள்ள ஏக்கத்தை துடைக்கும் விதமாக, இந்தாண்டு ஹோலி பண்டிகையில், அவர்களை பங்கேற்க வைக்க, அந்த சமூக, தொண்டு அமைப்பு திட்டமிட்டது.உ.பி., மாநிலம், பிருந்தாவனில், இந்த கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நாடு முழுவதும், 2,000க்கும் மேற்பட்ட விதவை பெண்கள், இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக அழைக்கப்பட்டுஇருந்தனர்.
வண்ண புடவை: வெள்ளை புடவை அணிந்திருந்த அவர்கள், ஒருவர் மீது ஒருவர், வண்ணப் பொடிகளை தூவினர். தண்ணீர் துப்பாக்கிகளில், தண்ணீரை நிரப்பி, பீய்ச்சி அடித்தனர். மலர்களையும், ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அடுத்த சில நிமிடங்களிலேயே, அவர்கள் அணிந்திருந்த வெள்ளை நிற புடவைகள், வண்ணப் புடவைகளாக மாறின. இதில் பங்கேற்ற, கமலா என்ற பெண் கூறுகையில், ""கணவரை இழந்ததில் இருந்து, எந்த சுப நிகழ்ச்சியிலும், நான் பங்கேற்கவில்லை. இதனால், என் மனதில், ஏக்கம் இருந்தது. அந்த ஏக்கம், இப்போது நீங்கி விட்டது, என்றார்.மகாபாரத புராண கதைகளின் படி, கிருஷ்ண பகவான், தன் இளமை காலங்களில், பிருந்தாவன் நகரில் தான், வசித்தார் என, கருதப்படுகிறது. இந்நகரம், இந்துக்களின், புனித நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு, முதுமை காலத்தை நிறைவு செய்ய விரும்பும், விதவைப் பெண்களுக்கான, மடங்கள், ஏராளமாக உள்ளன.