சுந்தரராஜ பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர திருமஞ்சனம்
ஆர்.கே.பேட்டை : பத்மாவதி, சுந்தரவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாளுக்கு, நேற்று காலை திருமஞ்சனம் நடந்தது. மாலையில், ஊஞ்சலில் சேவை சாதித்தார். ஆர்.கே.பேட்டை பிராமணர் தெருவில், சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், பங்குனி உத்திரத்தை ஒட்டி, நேற்று காலை, பெருமாளுக்கு, திருமஞ்சனம் நடந்தது. காலை, 10:00 மணிஅளவில், கோவில் முன்மண்டபத்தில், பத்மாவதி தாயார், சுந்தரவள்ளி தாயாருடன் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாளுக்கு, சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் நடந்தது. மாலையில், கோவில் வளாகத்தில் சுவாமி உலா வந்தார். தொடர்ந்து, பத்மாவதி, சுந்தரவள்ளி தாயாருடன், ஊஞ்சலில் சேவை சாதித்தார். திரளான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும், கோவிலில் கொடிமரம் ஸ்தாபனம் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த ஆண்டு சித்திரை பிரம்மோற்சவம் நடைபெறும் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.