உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ணாரி கோவில் குண்டம் விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்!

பண்ணாரி கோவில் குண்டம் விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்!

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், பண்ணாரி மாரியம்மன் கோவிலில் அதிகாலை நடந்த குண்டம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர். ஈரோடு, சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலில், பங்குனி உத்திரம் நட்சத்திரத்தை அடுத்து வரும் செவ்வாய்கிழமை அதிகாலை குண்டம் விழா நடப்பது வழக்கம். இந்தாண்டுக்கான குண்டம் விழா, கடந்த, 3ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, பண்ணாரியம்மன், கடந்த, 5ம் தேதி கோவிலில் இருந்து புறப்பட்டு, சிக்கரசம்பாளையம், வெள்ளியம்பாளையம் புதூர் என பல்வேறு கிராமங்களுக்கு வீதியுலா சென்று, 11ம் தேதி இரவு பண்ணாரி கோவிலை அடைந்தது.அன்று இரவு, 11 மணிக்கு மேல், கோவில் முன் கம்பம் சாட்டும் நிகழ்ச்சி நடந்தது. குழிகம்பத்தில் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி, கம்பத்தை வழிபட்டனர். தினமும் இரவு, கோவில் வளாகத்தில், மலைவாழ் மக்களின், தாரை, தப்பட்டை மற்றும் பீனாட்சி வாத்திய இசைகளுடன், கம்பம் சுற்றி அம்மன் புகழ்பாடும் கழியாட்டம் நடந்தது. நேற்று அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, பண்ணாரி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, குண்டத்தில் பரப்பி வைக்கப்பட்ட வேம்பு மற்றும் ஊஞ்சல் மரத்துக்கு, தீ வைத்து, அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது.

அதிகாலை, 3.50 மணிக்கு கோவிலின் தலைமை பூசாரி ராஜசேகர், தீ மிதித்தார். முன்னதாக குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ராஜசேகரை தொடர்ந்து, பூசாரிகள் ராஜேந்திரன், ஆறுமுகம், பார்த்திபன், செந்தில் ஆகியோர் தீ மிதித்தனர். தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை முதல் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் தீ மிதித்து, தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர். கோவை அறநிலைத்துறை இணை ஆணையர் நடராஜன், முன்னாள் எம்.பி., காளியப்பன், தற்போதைய நீலகிரி லோக்சபா அ.தி.மு.க., வேட்பாளர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., செல்வி முருகேசன் உட்பட பலர் தீ குண்டம் இறங்கினர்.பக்தர்கள் கையில் வேப்பிலையுடன், மாரியம்மா கோஷம் முழங்க தீ குண்டம் இறங்கி, நேராக பண்ணாரி மாரியம்மனை தரிசித்தனர். இதில், பல்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் உட்பட, லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர். அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு ஊர்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள், பாதயாத்திரையாக நடந்து வந்து, குண்டம் இறங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !