நத்தம் மாசித்திருவிழாவில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி!
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப்பெரு விழாவை முன்னிட்டு, நேற்று வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.திண்டுக்கல் மாவட்டம் நத்தம், மாரியம்மன் கோயில் மாசிப்பெரு விழா மார்ச் 3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் கரந்தன் மலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்து, காப்புக்கட்டி விரதமிருந்தனர்.விழா நாட்களில், அம்மன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப் பட்ட கேடயம், சிம்மம், அன்னம் ஆகிய வாகனங்களில் நகர் உலா வந்தார். பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு, பால்குடங்கள், அக்கினி சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.நேற்று மாலையில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், பக்தர்கள் பூக்குழி இறங்கினர். திரிசூல் கம்பம் அம்மன் குளத்தில் விடப்பட்டது. விழா நிறைவு நாளான இன்று இரவு 9:00 மணிக்கு மேல் அம்மன் பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது.