தர்மராசர் கோவிலில் .. 2,000 பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதிப்பு!
பொதட்டூர்பேட்டை: ஐந்து ஆண்டுகளுக்கு பின், கோலாகலமாக நடந்த தீமிதி திருவிழாவில், 2,000 பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். பொதட்டூர்பேட்டை திரவுபதியம்மன் உடனுறை தர்மராசர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நவ., 15ம் தேதி நடந்தது. கோவில் சீரமைப்பு பணிகள் காரணமாக, கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தீமிதி திருவிழா, கடந்த 3ம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்கியது. கடந்த புதன்கிழமை திரவுபதியம்மன் திருக் கல்யாணமும், வெள்ளியன்று அர்ச்சுணன் தபசும் நடந்தன. நேற்று காலை 11:00 மணியளவில், மகாபாரத 18ம் போர் நடந்தது. இதில், துரியோதணன் கொல்லப்பட்டான்; மூத்த மகனை பறிகொடுத்த காந்தாரி, ஆவேசம் அடைந்தாள். போர்க்களத்தில் இருந்தவர்களை துடைப்பத்தால் நைய புடைத்தாள். மாலை, 6:00 மணியளவில், கோவில் முன்பாக மூட்டப்பட்ட தீக்குண்டத்தில், காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருந்த, 2,000 பக்தர்கள் தீயில் இறங்கி தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இன்று, பட்டாபிஷேகம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.