மழைவேண்டி அம்மையப்பரிடம் விண்ணப்பம்
திருப்பூர் : அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில், மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை, வழிபாடு நிகழ்ச்சி, திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் உள்ள பனிரெண்டார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. அம்மையப்பர் (சிவ-பார்வதி), அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர்; சமய குறவர், சந்தான குறவர்களுக்கு, மலர் அபிஷேகம் செய்வித்து, பன்னிரு திருமுறைகள் ஓத, திருகயிலாய வாத்தியங்கள் முழங்க, சிறப்பு பூஜை நடந்தது. தேவாரம், திருவாசக விண்ணப்பத்தை தொடர்ந்து, மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.திருஞானசம்பந்தர், பொன்மயிலம்மை, பராத்துறைநாதரை வேண்டி பாடிய, "நீறு சேர்வதொர் மேனியர் நேரிழை என்கிற, 11 பாடல்கள் கொண்ட, ஒன்றாம் திருமுறை பதிகத்தை அனைவரும் ஒருசேர பாடி, இறைவனிடம் மழை வேண்டி விண்ணப்பித்தனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, திருச்சி, சேலம், ராசிபுரம், திண்டுக்கல், ஆரணி என, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிவனடியார்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து நடந்த சிவனடியார்கள் கலந்தாய்வு கூட்டத்துக்கு, இந்து ஆலய மீட்பு இயக்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் செயல் அலுவலர் ராமநாதன், சிவனடியார் கூட்டமைப்பு மாநில செயலாளர் சரவணகுமார், பொருளாளர் வெங்கடேசன், திருப்பூர் சிவனடியார் கூட்டமைப்பு ஒருங்கிணைபாளர் திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், "பாடல் பெற்ற அனைத்து கோவில்களிலும், தினம் இருவேளை தவறாமல் பூஜை நடக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், உழவார பணி மேற்கொள்ள வேண்டும். ஞாயிறுதோறும் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், மாலை 5.00 மணி முதல் கயிலாய வாத்திய பயிற்சி இலவசமாக அளிக்க வேண்டும், என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.