உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் அருகில் டாஸ்மாக் கடை: குடிமகன்கள் ரகளை!

கோவில் அருகில் டாஸ்மாக் கடை: குடிமகன்கள் ரகளை!

ஆத்தூர்: ஆத்தூர் வெள்ளை விநாயகர் கோவில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில், மது அருந்தும் குடிமகன்கள் பலர், சாலையில் படுத்தும், கடைகள் முன் அமர்ந்து ரகளை செய்வதாலும், பொதுமக்கள் கடும் வேதனையடைகின்றனர். ஆத்தூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெள்ளை விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், இந்து அறநிலையத் துறை அலுவலகம், வணிக வளாக கடைகள் உள்ளன. இக்கோவில் அருகில், அடுத்தடுத்து மூன்று டாஸ்மாக் கடைகள் உள்ளது. இங்கு, மது அருந்த வரும் குடிமகன்கள், போதை தலைக்கேறிய நிலையில் ரகளை செய்வதோடு, சாலையில் படுத்தும் இடையூறு செய்கின்றனர். அதனால், தியேட்டர், மருத்துவமனை, குடியிருப்புக்கு செல்லும் பெண்கள், மாணவிகள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். நேற்று மதியம், பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் முருகன் என்பவர், போதை தலைக்கேறிய நிலையில், கொளுத்தும் வெயிலில் சாலையில் படுத்து ரகளை செய்தார். போலீஸாருக்கு தகவல் அளித்தும் யாரும் வராததால், பஸ்ஸில் வந்த பயணிகள் உள்ளிட்டோர், சாலையோரம் அப்புறப்படுத்தினர். அவ்வழியாக சென்ற பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள், முகம் சுளித்தபடி சென்றனர். எனவே, கோவில் அருகில் உள்ள, மூன்று டாஸ்மாக் கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !