மயானக் கொள்ளை திருவிழா!
புதுச்சேரி: சுப்பையா நகர், அங்காள பரமேஸ்வரி கோவில் மயானக் கொள்ளை திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தட்டாஞ்சாவடி சுப்பையா நகர் தேவி புற்று கருமாரியம்மன் கோவில் மற்றும் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மூன்றாமாண்டு மயானக் கொள்ளை திருவிழா கடந்த 28ம் தேதி துவங்கியது. இரண்டாம் நாளான 29ம் தேதி திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் பங்கேற்று விளக்கேற்றினர். மூன்றாம் நாளான நேற்று காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. மதியம் 12.00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பிற்பகல் 2.00 மணிக்கு அலங்கரிக்கப்பட் தேரில் அம்மன் வீதியுலா வந்து அருள் பாலித்தார். மயானக் கொள்ளை மாலை 6.00 மணிக்கு நடந்தது. சுப்பையா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவு 7.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு, 9.00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.