உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபுர கலசம், பைக், ஐம்பொன் சிலை...; கிணற்றில் தோண்டத் தோண்ட புதையல்!

கோபுர கலசம், பைக், ஐம்பொன் சிலை...; கிணற்றில் தோண்டத் தோண்ட புதையல்!

குறிச்சி : குறிச்சி குளத்திலுள்ள கிணற்றை தூர்வாரும்போது, கோபுர கலசம், மோட்டார் பைக்குக்கு அடுத்தபடியாக, ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. கோவை மாநகராட்சி 94வது வார்டுக்குட்பட்ட மாச்சம்பாளையம் பகுதிகளுக்கு, குறிச்சி குளத்திலுள்ள கிணற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதை தூர்வாரும் பணி, கடந்த சில நாட்களாக நடக்கிறது. அப்போது, பைக் ஒன்று கிணற்றில் கிடப்பது தெரிந்தது. தொடர்ந்து நேற்றும் தொழிலாளர்கள் தூர் வாரும் பணியை மேற்கொண்டனர். அப்போது, இரண்டடி உயரமுள்ள ஐம்பொன்னால் செய்யப்பட்ட அம்மன் சிலை ஒன்று தண்ணீரில் மூழ்கி கிடப்பது தெரிந்தது. இது குறித்து தொழிலாளர்கள், தெற்கு மண்டல தலைவர் பெருமாள்சாமிக்கு தகவல் கொடுத்தனர். அவர் மதுக்கரை தாசில்தார் சுமகுமாரிக்கு தகவல் தெரிவித்தார்.தாசில்தார் சுமகுமாரி, வி.ஏ.ஓ., வாசு உள்ளிட்டோர் அங்கு வந்தவுடன், சிலை மேலே எடுக்கப்பட்டது. பல லட்சம் மதிப்பிலான, 15 கிலோ எடையுள்ள இச்சிலையின் பீடத்தில், பூ.சின்னப்ப செட்டியார் கைங்கரியம் என, எழுதப்பட்டிருந்தது. தொடர்ந்து, சிலை மாவட்ட வருவாய் அலுவலர், அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கிணற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன், வாலிபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து, கிணற்றில் மேல்பகுதியில், இரும்பு வலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், கிணற்றை தூர் வாரும் பணியின்போது, பைக் ஒன்று உள்ளே கிடப்பது தெரிந்தது. தொடர்ந்து நேற்று அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் முன்பாக, கோபுர கலசம் ஒன்று, குளத்தினுள் கண்டெடுக்கப்பட்டது. இதனால், இக்கிணற்றில் இன்னும் என்னென்ன புதையல்கள் கிடைக்குமோ என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !