4ம் தேதி சிதம்பரம் பாண்டியநாதர் கோவிலில் பங்குனி உத்திர விழா துவக்கம்
சிதம்பரம்: சிதம்பரம் பாண்டியநாதர் கோவில் பங்குனி உத்திர திருவிழா வரும் 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கடந்த 2009ம் ஆண்டு பாண்டியநாதர் கோவில் 4 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி செய்ய, சுவாமி பாலாயம் செய்யப்பட்டு கோவில்கள் இடிக்கப்பட்டன. நடராஜர் கோவில் வழக்கு நீதிமன்றத்தில் இருந்ததால் கோவில் பணிகள் தடைபட்டது. இந்நிலையில், கடந்த ஜனவரி 25ம் தேதி காஞ்சி சங்கராச்சாரியார் நடராஜர் கோவிலுக்கு வந்தார். அப்போது பாண்டியநாதர் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து கோவிலை சுற்றிப்பார்த்து, கும்பாபிஷேகம் செய்ய திருப்பணி விரைவில் துவங்கப்படும் என தெரிவித்தார்.பல ஆண்டுகளுக்கு பின் பாண்டியநாதர் கோவிலில் பங்குனி உற்சவம் திருவிழா வரும் 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனையொட்டி சுப்ரமணியருக்கு தினம் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடக்கிறது. இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு செய்யப்பட்டு வீதியுலா நடக்கிறது. உற்சவத்தில் 12ம் தேதி தேரோட்டமும், 13ம் தேதி பங்குனி உத்திர தீர்த்தவாரி உற்சவமும் நடக்கிறது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். விழா ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.