ஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் வழங்கும் விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_29736_112013809.jpgஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் வழங்கும் விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில், திருமுலைப்பால் வழங்கிய நிகழ்வில், ஆயிரக்கணக்காண பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாகை மாவட்டம், சீர்காழியில், சட்டைநாதர் கோவில் உள்ளது. இங்குள்ள பிரம்மதீர்த்த குளக்கரையில், திருஞான சம்பந்தருக்கு, அம்பாள் ஞானப்பால் கொடுத்த நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில், திருமுலைப்பால் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. சிறப்பு அபிஷேகம் : நேற்று, தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில், விழா நடந்தது. கோவிலில், தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ள திருஞானசம்பந்தருக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நேற்று காலை நடந்தன. பிற்பகல், 2:15 மணிக்கு, உமையம்மை புஷ்ப பல்லக்கில், பிரம்மதீர்த்த குளக்கரையில் எழுந்தருளிய திருஞானசம்பந்தருக்கு, தங்க கிண்ணத்தில் ஞானப்பால் வழங்குவது நிகழ்த்திக் காட்டப்பட்டது. அதையடுத்து, சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில், பிரம்ம தீர்த்தக்கரையில் எழுந்தருளி, திருஞானசம்பந்தருக்கு காட்சியளித்தனர். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பலா, வாழை, பேரிட்சை பழங்கள், சர்க்கரை கலந்த பாலை, சுவாமி அம்பாளுக்கு நைவேத்தியம் செய்து, குழந்தைகள் ஞானம்பெற பிரார்த்தனை செய்தனர். மாலை, திருஞானசம்பந்தர் பல்லக்கில் முக்கிய வீதிகள் வழியாக, ஓசைநாயகி சமேத தாளபுரீசுவரர் சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு பதிகம் பாடப்பட்டு, சீர்காழி பிரம்மபுரீஸ்வர சுவாமி கோவிலுக்கு மீண்டருளும் நிகழ்ச்சி, இரவு நடந்தது.