உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி கோவிலில் ஸஹஸ்ர தீபாலங்கார சேவை இடம் மாற்றம்!

திருப்பதி கோவிலில் ஸஹஸ்ர தீபாலங்கார சேவை இடம் மாற்றம்!

திருப்பதி: திருமலை வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தை இடித்து, 100 மீட்டர் இடைவெளி விட்டு, புதிய மண்டபத்தை கட்ட, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில், திருமலை ஏழுமலையான் கோவில் உள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். திருமலை - திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், பக்தர்கள் வசதிக்கேற்ப, அவ்வப்போது, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, ஏழுமலையானின் ஊஞ்சல் மண்டபத்தைச் சீரமைக்கும் பணியை தேவஸ்தானம் துவங்க உள்ளது. கோவிலின் அக்னி மூலையில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தை இடித்து, புதிய மண்டபத்தை கட்ட, ஜீயர்கள், ஆகம பண்டிதர்கள் ஒப்புதல் அளித்ததால், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஊஞ்சல் மண்டபம் இடிக்கும் பணி துவங்கியது. கடந்த 2003, மாஸ்டர் பிளான் திட்டத்தின் கீழ், கோவில் எதிரில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப்பட்டு, மாட வீதிகள் அகலப்படுத்தப்பட்டன. அப்போது, அங்கிருந்த ஊஞ்சல் மண்டபத்தையும் இடித்து, உள்புறம் நகர்த்த தேவஸ்தானம் முடிவு செய்தது. அதற்கு, ஹதீராம்ஜி மடம், நிலம் அளிக்க மறுத்ததால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. இதனால், பிரம்மோற்சவம் நடைபெறும் போது, தேரை திருப்ப மிகவும் சிரமமாக இருந்ததால், அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி, 100 மீட்டர் இடைவெளி விட்டு அமைக்க தேவஸ்தானம் திட்டமிட்டது. தற்போது, 1.8 கோடி கோடி செலவில் செய்யப்பட்டு வரும் தெற்கு மாட வீதி பணிகள் முடிவு பெறும் தருவாயில் உள்ளதால், ஊஞ்சல் மண்டபத்தை இடித்து, மாடவீதியை அகலப்படுத்தும் முயற்சியில், தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது. இங்கு, தினமும் மாலை நடைபெறும், ஸஹஸ்ர தீபாலங்கார சேவை, இனி, வாகன மண்டபம் அருகில் உள்ள வைபவோத்ஸவ மண்டபத்தில் நடைபெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !