போரூர் ராமநாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
சென்னை : திருவல்லிக்கேணி சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலிலும், போரூர் ராமநாதீஸ்வரர் கோவிலிலும், நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவல்லிக்கேணி பகுதி, நெசவாளர் தெருவில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த, 6ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கின.நேற்று அதிகாலை, 4.00 மணிக்கு, ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து காலை ௯:௦௦ மணிக்கு, புதிய ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தான விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.மாலை 9.00 மணிக்கு, திருக்கல்யாணமும், இரவு 8.00 மணிக்கு திருவீதி உலாவும் நடைபெற்றது.போரூரில், ராமர் வழிபட்ட, ராமநாதீஸ்வரர் கோவில் உள்ளது. அங்கு, புதிதாக, 21 அடி உயர கல்ஹாரத்துடன் கூடிய நுாதன ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் கொடிமரம் அமைக்கப்பட்டு உள்ளன.அதன், கும்பாபிஷேக விழா, கடந்த 6ம் தேதி காலை 7:00 மணிக்கு, மகாகணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை, 10:00 மணிக்கு, பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில், கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும்,அபிஷேகமும் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.