மழை பெய்ய வேண்டி கஞ்சி வினியோகம்
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதி மக்கள், மழை வேண்டி, கஞ்சி காய்ச்சி, பொதுமக்களுக்கு வழங்கினர். ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர், அலவாய்ப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தாசன்காடு பகுதி மக்கள், அங்குள்ள மாரியம்மன் கோவில் முன்பு, நாட்டில் மழை பெய்ய வேண்டி கஞ்சி காய்ச்சினர். முன்னதாக, நான்கு நாட்களாக, அப்பகுதியில், ஒவ்வொரு வீடாக சென்று, ராகி, கம்பு, சோளம், அரிசி வாங்கிச் சென்றனர். பின்னர், நேற்று, கஞ்சி காய்ச்சி ஸ்வாமி வழிபாடு செய்து விட்டு, பொதுமக்களுக்கு கஞ்சி வினியோகம் செய்தனர். அதேபோல், வெண்ணந்தூர் வெட்டுக்காடு சித்தி விநாயகர் கோவிலில், அகத்தியர் அன்னதான குழு சார்பில், உலக சித்தர்கள் தினத்தையொட்டி, மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, சித்தி விநாயகருக்கு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதில், ஏராளமான பக்தர்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்றனர்.