சமயபுரத்தில் சித்திரை தேரோட்ட விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
மண்ணச்சநல்லூர்: தமிழகத்தின் புகழ் பெற்ற அம்மன் வழிபாட்டு ஸ்தலமான சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று பக்தர்கள் வடம் பிடிக்க கோலாகலமாக நடந்தது. தமிழகத்திலுள்ள அம்மன் வழிபாட்டு ஸ்தலங்களுள் முதன்மையானதாகவும், பக்தர்களின் சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகவும் விளங்குவது சமயபுரம் மாரியம்மன் கோவில். இத்தலத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் செவ்வாய் கிழமையன்று தேரோட்டம் நடப்பது வழக்கம். மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், பக்தர்களின் நலனுக்காகவும், 28 நாட்கள் அம்மன் மேற்கொள்ளும், "பச்சைப்பட்டினி விரதம் என்னும் பூச்சொரிதல் விழா பூர்த்தியடைந்து சிவனிடம் சகல சக்திகளையும் பெற்று படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் ஆகிய ஐந்தொழில்களை அம்மன் பெற்றதாக ஐதீகம். "பச்சைப்பட்டினி விரதம் இருந்த அம்மனை வாழ்த்தி பூமாரி பொழிந்து வாழ்த்திய பக்தர்களுக்கு அருள்பாலிப்பதே சித்திரை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா ஏப்ரல் ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து விழா நாட்களில் அம்பாள் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, குதிரை உட்பட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் முக்கிய நாளான நேற்று காலை ஒன்பது மணியளவில் திருத்தேரில் அம்பாள் எழுந்தருளினார். பின்னர் காலை, 10.30 மணியளவில் பக்தர்கள் திருத்தேரை வடம் பிடிக்க தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் ஆடி அசைந்து நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து மதியம், 2.45 மணியளவில் தேர் நிலையை அடைந்தது.
பக்தர்கள் பலர் தங்கள் நேர்த்திக்கடனாக அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், மொட்டையடித்தல், பால் குடம் எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்தனர். திருச்சி எஸ்.பி., ராஜேஸ்வரி தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். பல்வேறு அமைப்புகள் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. சமயபுரம் மாரியம்மன் சித்திரை திருவிழா முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக ச.கண்ணனூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் தற்காலிகமாக, 60 குடிநீர் தொட்டிகள், 10 தற்காலிக கழிப்பிடம், நடமாடும் கழிப்பிடம், தற்காலிக பஸ்ஸ்டாண்ட், நெ.1 டோல்கேட்டிலிருந்து சமயபுரம் வரை அமைக்கப்பட்டிருந்தது.