இந்து சமய அறநிலையதுறை மண்டல இணை ஆணையர் நியமனம் எப்போது?
இந்து சமய அறநிலையதுறையில், சென்னை மண்டல இணை ஆணையர் பணியிடம், பல மாதங்களாக, காலியாக உள்ளதால், அறநிலையதுறை செயல்பாடுகளில், சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பணிகள் சுணக்கம்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 6,000க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றை, அறநிலையதுறை, நிர்வகித்து வருகிறது. அந்த மாவட்ட கோவில்களில் நடக்கும், அனைத்து சம்பவங்களுக்கும் அறநிலையதுறையே பொறுப்பு. ஆனால், பல மாதங்களாக, சென்னை மண்டல இணை ஆணையர் பணியிடம், காலியாக உள்ளது. இதனால், அறநிலையத்துறை பணிகளில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது. சென்னை மண்டல இணை ஆணையராக திருமகள் பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு, திருவண்ணாமலை, அருணாச்சல ஈஸ்வரர் கோவில், கோசாலையில் உள்ள பசுக்களுக்கு, போதிய உணவளிக்காததால், இரண்டு கன்றுகள் இறந்தன. அதனால், திருவண்ணாமலை மண்டல இணை ஆணையராக பணிபுரிந்த பரஞ்சோதி, தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டார். அதனால், திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் பொறுப்பு, திருமகளுக்கு, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இதனால், சென்னை, திருவண்ணாமலை மண்டலங்களின் இணை ஆணையராக, கூடுதல் சுமையுடன் பணிபுரிந்து வந்தார். ஆறு மாதங்களுக்கு முன், கூடுதல் ஆணையராக (விசாரணை) பதவி உயர்வு பெற்றார்.
திருட்டு அதிகரிப்பு: கூடுதல் ஆணையர் (பொது) பதவி, கூடுதல் பொறுப்பாக, வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, திருமகள் கூடுதல் பொறுப்பு வகித்து வரும், எந்த பணியிடமும் நிரப்பப்படவில்லை. கூடுதல் சுமையுடன் தவித்து வருவதால், சென்னை மண்டல பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, சமீபகாலமாக, கோவில்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, சென்னை மண்டலத்துக்கு, இணை ஆணையரை, உடனடியாக நியமிக்க வேண்டும் என்பதே, பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.