பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்படும்: கலெக்டர் தகவல்!
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, போதிய வசதிகள் செய்யப்படும், என, கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்தார். மதுரையில் இதுகுறித்து நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் கண்காணிக்கப்படுவர். தேரோட்டத்தன்று தேர் செல்வதற்கு முன், வெப்பத்தை தணிக்க லாரிகளில் தண்ணீர் பாய்ச்சப்படும். பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.வைகையில் குடிநீர் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே இருக்கும். தண்ணீருக்கான வசதிகள் செய்யப்படும். வைகையில் தண்ணீர் இல்லாததால், தண்ணீர் தொட்டியில் அழகர் இறங்க வசதிகள் செய்யப்படும், என்றார்.போலீஸ் துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா, டி.ஆர்.ஓ., சிற்றரசு, அறநிலையத்துறை இணை கமிஷனர் ஜெயராமன் மற்றும் பலர் பங்கேற்றனர்.