நத்தா நல்லுார் கோவில் தெப்பம் வழக்கம் போல் நடைபெறும்
காஞ்சிபுரம் : நத்தா நல்லுார் கிராம எல்லம்மன் கோவில் தெப்ப உற்சவம், வழக்கம் போல் நடைபெறும், என, கோட்டாட்டசியர் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் அடுத்த நத்தாநல்லுார் கிராமத்தில் அமைந்துள்ள எல்லம்மன் கோவிலில், ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 24ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதில், வரும் 30ம் தேதி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தெப்ப உற்சவத்தின்போது, காலனி பகுதி மக்களின் சார்பாக, இருவரை தெப்பத்தின் மீது ஏற அனுமதிக்க வேண்டும். மறுக்கப்பட்டால், பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவிப்போம் என, அப்பகுதியை சேர்ந்த சவுந்திரராஜன், துரை ஆகியோர், கடந்த 20ம் தேதி கோட்டாட்சியரிடம் மனு அளித்திருந்தனர். இந்த பிரச்னை தொடர்பாக, சமரச பேச்சுவார்த்தை காஞ்சிபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அப்பகுதி பொது மக்கள் மற்றும் காலனி பகுதி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இரண்டரை மணி நேரம் நடந்த கூட்டத்தில் இருதரப்பினரும், தங்கள் கருத்துகளை எடுத்துக் கூறினர். அப்போது, காஞ்சிபுரம் கோட்டாட்சியர் சந்திரன் பேசுகையில், தெப்ப உற்சவ நாள் நெருங்கிவிட்டதாலும், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதாலும், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்காக, தெப்ப உற்சவம் வழக்கம்போல் நடைபெறும். சவுந்திரராஜன் மற்றும் துரை ஆகியோரின் கோரிக்கை குறித்து, தேர்தலுக்கு பின் பரிசீலிக்கப்படும், என்றார்.இந்த சமரச கூட்டத்திற்காக ஏராளமான மக்கள், ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.