மலையம்மன் கோவிலுக்கு செல்லும் தார்சாலையை செப்பனிட கோரிக்கை
தியாகதுருகம்: தியாகதுருகம் மலையம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையை புதுப்பிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தியாகதுருகம் நகரின் மையப்பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க மலை உள்ளது. இதன் மேற்கு பகுதியில் நூற்றாண்டு பழமையான பகவதி மலையம்மன் கோவில் உள்ளது. இயற்கையான பாறை இடுக்கில் கோவில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். இதற்கு படிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக செல்ல மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாதம் தோறும் பவுர்ணமி தினத்தில் இங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இதற்காக மலையை சுற்றிலும் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இச்சாலை பராமரிப்பு இன்றி ஜல்லிகள் பெயர்ந்து பயன்படுத்த முடியாத அளவுக்கு குண்டும், குழியுமாக மாறியுள்ளது. சாலையின் இருபுறமும் கோழி இறைச்சி கழிவுகள், சலூன் கடை குப்பைகளை கொட்டும் இடமாக மாறியுள்ளது. சில இடங்களில் முட்செடிகள் சாலையில் நீட்டிக் கொண்டிருப்பதால் கோவிலுக்கு மிகவும் சிரமப்பட்டு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது பக்தர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மலையம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையை செப்பனிட்டு புதுப்பிக்கவும், அசுத்தப்படுத்தாமல் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.