சித்ரா பவுர்ணமி விழாவில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை!
மூணாறு : மங்களாதேவி கண்ணகி கோயிலில் நடக்கும் சித்ரா பவுர்ணமி விழாவின்போது, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, இடுக்கி மாவட்ட கலெக்டர் அஜித்பாட்டில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: தேக்கடி வனப்பகுதியில் உள்ள மங்களதேவி கண்ணகி கோயிலில், சித்ரா பவுர்ணமி திரு விழா மே 14ல் நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், சுற்றுச் சூழலுக்கு தீங்கு ஏற்படும் விதத்திலான செயல்களை அனுமதிக்க இயலாது. பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ள நிலையில், 5 லிட்டர் பிளாஸ்டிக் கேன்களில் குடிநீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். பிளாஸ்டிக் பொருட்களால் பொட்டலமிடுவதை தவிர்த்து, சைவ உணவுகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். குமுளியில் இருந்து கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிச் செல்லும் ஜீப்புகளுக்கு மோட்டார் வாகன துறையினரிடம் தகுதி சான்று பெற வேண்டும். இதற்கான ஆய்வு மே 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை குமுளி மோட்டார் வாகனத் துறை öபோஸ்ட்டில் நடக்கிறது. வாகனங்களின் ஆவணங்கள், உரிமம் உள்ளிட்டவைகளுடன் டிரைவர்கள் ஆய்வுக்கு செல்ல வேண்டும். மோட்டார் வாகனத் துறையினர் வழங்கும் "பெர்மிட் ஜீப்புகளின் முன்புறம் ஒட்டப்பட வேண்டும். திருவிழாவின்போது, ஜீப்புகளின் ஒவ்வொரு "டிரிப் புகளுக்கும், வனத்துறையினர் "பாஸ் வழங்குவார்கள். தரிசனம் காலை 8 மணி முதல், மாலை 5 மணி வரை நடக்க உள்ளதால், காலை 6 மணி முதல் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கபடுவார்கள். தரிசனம் முடிந்து திரும்புகையில், நெரிசலை சமாளிப்பதற்கும், ஜீப் வசதியை உறுதி படுத்துவதற்கும் போலீசார் மற்றும் வனத்துறையினர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும், எனக் கூறியுள்ளார்.