உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா

கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா

ஓசூர்: ஓசூரில், நேற்று முன்தினம் நடந்த கோட்டை மாரியம்மன் கோவில், பல்லக்கு உற்சவ திருவிழாவை முன்னிட்டு, நகரமே விழாக்கோலம் பூண்டது. ஓசூர் ராம் நகரில் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும், மாவிளக்கு மற்றும் பல்லக்கு உற்சவ திருவிழா கடந்த, 22 ம் தேதி, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனுக்கு விரதம் இருந்து காப்பு கட்டி கொண்டனர். விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு நாளும், அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், கடந்த, 5ம் தேதி, அண்ணாநகர் சின்ன கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து, பெண்கள் சார்பில், பூக்கரகம் எடுத்து வரப்பட்டது. விழாவின், முக்கிய நிகழ்ச்சியான மாவிளக்கு மற்றும் பல்லக்கு உற்சவ விழா நேற்று முன்தினம் காலை துவங்கியது. காப்பு கட்டி அம்மனுக்கு விரதம் இருந்து வந்த பக்தர்கள், பெரியார் நகரில் உள்ள கங்கை அம்மன் கோவில் மற்றும் அண்ணாநகர், சுண்ணாம்புஜிபி, தேர்ப்பேட்டை, சானசந்திரம், ராம்நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் இருந்து, அலகு குத்தியும், கிரேன் மூலம் விமான காவடி சுமந்து வந்தும், கோட்டை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். இதனால், ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டது. கோட்டை மாரியம்மனை வழிபட, பல்வேறு பகுதிகளில் இருந்து, பல ஆயிரம் பக்தர்கள் வந்ததால், ஓசூர்-தளி சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, பஜார் வீதி, தாலுகா அலுவலகம், பெரியார் நகர், தேன்கனிக்கோட்டை சாலை, கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, பழைய ஏ.எஸ்.டி.சி., அட்கோ உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பல்லக்கு உற்சவ திருவிழாவை முன்னிட்டு, நேற்று மாலை, 7.30 மணிக்கு சிடி உற்சவமும், இரவு, 8 மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கோட்டை மாரியம்மன் திருவீதி உலா செல்லுதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோட்டை மாரியம்மன் கோவில் ஆலய கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !