மாரியம்மன் கோவில் தேரோட்டம்!
பெரம்பலூர்: எசனை காட்டுமாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். பெரம்பலூர் ஆத்தூர் சாலையிலுள்ள எசனை காட்டுமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஒவ் வொரு நாளும் அன்னம், ரிஷபம், சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் சாமி திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து நேற்றுமுன்தினம் அக்னிசட்டி ஏந்துதல், அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது. தங்களது வேண்டுதல்கள் நிறைவேறவும், நேர்த்தி கடன்களுக்காகவும் எசனை கிராமத்திலிருந்து, 50க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் கைளில் அக்னிசட்டிகளை ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டு காட்டுமாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் மாவிளக்கு எடுத்து வந்தனர். இதில் 12 அடி நீளமுள்ள இரும்பு கம்பிகளை கன்னத்தில் குத்தியபடியும், குத்தீட்டிகளை இடுப்பில் சொருகியபடியும் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மூன்று பேர் விமான அலகு எனப்படும் முதுகில் குத்தப்பட்ட அலகுகளுடன் டிராக்டர்களில் உயரே கட்டப்பட்ட மூங்கில் கம்பங்களில் தொங்கியபடி ஊர்வலமாக வந்தனர். இதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகுவிமர்சையாக நடந்தது. இதில் எசனை, கோனேரிபாளையம், பெரம்பலூர், துறைமங்கலம், கவுல்பாளையம், நெடுவாசல், சிறுவாச்சூர், செஞ்சேரி, ஆலம்பாடி, வேப்பந்தட்டை, தொண்டப்பாடி, அன்னமங்கலம், அரசலூர், பாலையூர், கிருஷ்ணாபுரம், கீழக்கரை உள்ளிட்ட சுற்று வட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர்.