தாடிக்கொம்பு பகவதியம்மன் கோயில் விழா!
தாடிக்கொம்பு : தாடிக்கொம்பில் உள்ள பகவதியம்மன் கோயில் ஆண்டு திருவிழா நடக்கிறது. அம்மன் சாட்டுதல் வைபவத்துடன் விழா தொடங்கி தினமும் அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கோயிலிலிருந்து ஆபரணபெட்டி மண்டகப்படிகளுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. தாடிக்கொம்பு குடகனாற்றில் அம்மன் கண்திறப்பை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி ஊர்வலம் நடந்தது. கோயிலில் "கொலு வீற்றிருந்து சிறப்பு பூஜைகள் மற்றும் மண்டகப்படிகள் நடந்தது. மாலை நான்கு மணியளவில் மாவிளக்கு மற்றும் முளைப்பாரி அழைப்பு நடந்தது. தீச்சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு பூஜைகள் நடந்தது. வானவேடிக்கை முழங்க அம்மன் மின் ரதத்தில் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மண்டகப்படி அடைந்தது. இன்று மாலையில் அம்மன் மஞ்சள் நீராடி குடகனாற்றுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.