உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம்!

ராமேஸ்வரம் கோயிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம்!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலில், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டப்பட்டது. ராமாயண வரலாற்றில், சீதையை சிறைபிடித்து சென்ற ராவணன் செயலை, அவரது தம்பி விபீஷணர் கண்டிக்கிறார். ஆத்திரமடைந்த ராவணன், தம்பியை அவமரியாதை செய்தவுடன், அங்கிருந்து சில அமைச்சர்களுடன், விபீஷணர் வான் வழியாக புறப்பட்டு, தனுஷ்கோடிக்கு வருகிறார். அப்போது, ராவணனிடம் இருந்து சீதையை மீட்பது குறித்து ராமர், லெட்சுமணர், அனுமன், வானர சேனைகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்னர். அங்கு விபீஷணர் வருவதை கண்ட லெட்சுமணர், அனுமன், உளவு பார்க்க விபீஷணர் வருவதாக சந்தேகபடுகின்றனர். உடனே ராமர்,‘தன்னிடம் அடைக்கலம் கேட்டு வருபவர்களை, பாதுகாப்பது தான் தர்மம்’ எனக் கூறி, தம்பி லெட்சுமணரிடம் கடல் நீர் அள்ளி வரும்படி கூறினார். பின், விபீஷணரை இலங்கை மன்னராக அறிவித்த ராமர், அவர் மீது புனித நீரை ஊற்றி, பட்டாபிஷேகம் சூட்டுகிறார். இந்த வரலாற்று சம்பவத்தை நினைவு கூறும் விதமாக, ராமேஸ்வரம் கோயிலில் இருந்து ராமர், சீதை, லெட்சுமணர் புறப்பாடாகி, தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலில் எழுந்தருளினர். அங்கு விபீஷணருக்கு கோயில் குருக்கள் ராமநாரயணன், பட்டாபிஷேகம் சூட்டினார். பின் நடந்த மகா தீபாராதனையில் கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், மேலாளர் கக்காரின், இளநிலை பொறியாளர் ராமமூர்த்தி, பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கண்ணன் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !