வைகாசி விசாக திருவிழா: ராமநாதபுரம் கோயில்களில் கோலாகலம்!
ராமநாதபுரம் : ராமநாதபுரம் குண்டுக்கரை முருகன், சுவாமிநாத சுவாமி, ரெத்தினேஸ்வரர், பட்டணம்காத்தான் வினைதீர்க்கும் வேலவர், அழகன்குளம் பாலசுப்ரமணியசுவாமி கோயில்களில் வைகாசி விசாக திருவிழா ஜூன் 2ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் காலை, மாலை வேளையில் பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. நேற்று காலை சுவாமிக்கு 16 வகை அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ரெத்தினேஸ்வரர் கோயிலில் தேரோட்டம், வினைதீர்க்கும் வேலவர் கோயிலில் இரவில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் கதிர்காம சக்தி வடிவேல் முருகன், காந்தி நகர் சண்முக சடாச்சர சக்தி வடிவேல் முருகன், குயவன்குடி சுப்பையா கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
கீழக்கரை: கீழக்கரை அருகே லட்சுமிபுரம் சக்திவேல் முருகன் கோயிலில், மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. காவடி, பால்குடம் சுமந்து, அக்னி சட்டி ஏந்திய பக்தர்கள் ஊர்வலமாக வந்து கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தட்டாந்தோப்பு வழிகாட்டி பாலமுருகன், அண்ணா நகர்முருகன் கோயில்களில் வைகாசி விசாக திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.