திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 30 மணிநேரம் காத்திருப்பு!
திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் நேற்று, 30 மணிநேரம் காத்திருந்தனர். திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் அதிக அளவில் வர தொடங்கியுள்ளனர். அதனால், கடந்த சில வாரங்களாக பக்தர்கள் கூட்டம் திருமலையில் அதிகரித்துள்ளது. நேற்று தர்ம தரிசனத்தில், பக்தர்கள், 30 மணிநேரமும், பாதயாத்திரை பக்தர்கள் தரிசனத்திற்கு, 15 மணிநேரமும் காத்திருந்தனர். நேற்று மதியத்திற்குள், 15 ஆயிரம் பக்தர்கள், ஏழுமலையானை வழிபட்டதால், அதன்பின், 300 ரூபாய் விரைவு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. நேற்று அதிகாலை, 3:00, மணி முதல் மாலை, 6:00 மணி வரை, 44,832 பக்தர்களும், நேற்று முன்தினம், 74,967 பக்தர்களும் ஏழுமலையானை தரிசித்தனர். நேற்று மாலை நிலவரப்படி, தர்ம தரிசன பக்தர்கள், 31 காத்திருப்பு அறைகளை தாண்டி, 2 கிலோ மீட்டர் தொலைவிலும், பாதயாத்திரை பக்தர்கள், 15 காத்திருப்பு அறைகளை கடந்து, 1 கிலோ மீட்டர் தொலைவிலும் காத்திருந்தனர்.