கைலாசநாதர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேக விழா!
விழுப்புரம்: விழுப்புரம் பிரகன்நாயகி சமேத கைலாசநாதர் கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது. விழாவையொட்டி, கடந்த 30ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் மற்றும் நவக்கிரக ஹோமம் நடந்தது. நேற்று முன்தினம் கோ பூஜை, தன பூஜை, புதிய பிம்பங்களுக்கு பிம்ப சுத்தி, நயனோன் மீலனம் ஆகியவை நடந்தது. நேற்று காலை 9 மணியளவில் நான்கு திசைகளிலும் சுவாமி ஆபரணங்களை வைத்து திசா ஹோமம், மூர்த்தி ஹோமம் நடந்தது. மாலை 6 மணிக்குமேல் அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், பூர்ணாஹூதியும், 3ம் தேதி வேதபாராயணம், விசேஷ சாந்தி, யாக சாலை பூஜை, நாடிசந்தனம், தத்வார்ச்சனை நடந்தது. இதை யடுத்து நாளை (4ம் தேதி) அதிகாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம், சங்கல்பம் நடக்கிறது. காலை 7:30 மணி முதல் 8:15 மணிக்குள் ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் கும்பாபிஷேகமும், காலை 8:25 மணி முதல் 9:00 மணிக்குள் கைலாசநாதர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.