உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நியாய விலை பூஜை பொருள் விற்பனை!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நியாய விலை பூஜை பொருள் விற்பனை!

மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நியாயவிலை பூஜை பொருள் விற்பனைக்கு பக்தர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. துவக்க நாளிலேயே 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.தமிழக கோயில்களில் பூஜை பொருட்களை தனியார் சிலர் கூடுதல் விலைக்கு விற்றனர். வியாபாரிகள் சொல்லும் விலைக்கே பக்தர்கள் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதைத்தவிர்க்க பூஜை பொருட்களை கோயில் நிர்வாகம் சார்பில் நியாய விலையில் விற்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி மதுரை மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி, சென்னை கபாலீஸ்வரர், பார்த்தசாரதி, ஸ்ரீரங்கம், திருச்செந்துார் செந்திலாண்டவர், அண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், பழநி தண்டாயுதபாணி உள்ளிட்ட முக்கிய கோயில்களில் நியாய நிலை பூஜை பொருட்கள் விற்பனை நிலையம் ஜூலை 5ல் துவக்கப்பட்டது.அர்ச்சனை தட்டு (பிளாஸ்டிக் தட்டு) அல்லது துணிப்பை, தேங்காய் 1, வாழைப்பழம் 2, விபூதி பாக்கெட் 1, குங்குமம் 1, வெற்றிலை பாக்கு 1 ஆகியவற்றின் விலை 50 ரூபாய். கோயில் முன் உள்ள விற்பனை நிலையத்தில் 50 ரூபாய் செலுத்தி ரசீது பெற்று அர்ச்சனை தட்டு வாங்கலாம். அதிகாலை 5 முதல் பகல் 12 மணி, மாலை 5 முதல் இரவு 9 மணி வரை பெறலாம்.கோயில் சார்பில் நியாய விலை பூஜை பொருள் விற்பனைக்கு பக்தர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. துவக்க நாளிலேயே 30 ஆயிரம் ரூபாய்க்கு அர்ச்சனை தட்டுகள் விற்று தீர்ந்தன. இதன் எதிரொலியாக தனியார் சிலர் பூஜை பொருட்களின் விலையை குறைத்துள்ளனர்.

பூஜை பொருட்களை டெண்டர் மூலம் தனியாரிடம் கோயில் நிர்வாகம் கொள்முதல் செய்கிறது. நேரடி கொள்முதல் செய்தால் பூஜை பொருட்களின் விலையை மேலும் குறைத்து விற்க முடியும். பிளாஸ்டிக் அர்ச்சனை தட்டுக்கு பதிலாக மூங்கில் கூடை தட்டு அல்லது துணிப்பையை பயன்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கு நலன் பயக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !