உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோனியம்மன் கோவில் கலசங்கள் ராஜகோபுரத்தில் ஸ்தாபிதம்!

கோவை கோனியம்மன் கோவில் கலசங்கள் ராஜகோபுரத்தில் ஸ்தாபிதம்!

கோவை: கோனியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் ஸ்தாபிப்பதற்காக வேள்வியில் வைக்கப்பட்ட ஒன்பது ராஜகோபுரகலசங்கள் மங்கல இசை ஒழிக்க, வேதங்கள் முழங்க ராஜகோபுரத்தில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலில், ஒன்பது தங்ககலசங்களோடு கூடிய ஏழு நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கோவையிலுள்ள தங்க நகை தயாரிப்பாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து, ராஜகோபுரத்தில் வைப்பதற்கான தங்கக்கலசங்களை கோவிலுக்கு சமீபத்தில் வழங்கினர். ராஜகோபுரத்தின் மேற்பகுதியில் ஸ்தாபிக்ககூடிய ஒன்பது கலசங்கள் ஒவ்வொன்றும் நான்கரை அடி உயரத்தையும், ஒன்னரை அடி அகலத்தையும் கொண்டது. இதில் ஆறு அடுக்குகளில் தங்கரேக்குகள் பதிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோனியம்மன் கோவிலில் ஒன்பது கோபுரகலசங்களையும் வைத்து மலர்மாலைகள் அணிவித்து, வேள்வி நடத்தப்பட்டது. வேள்வியில் வேதவிற்பன்னர்கள் வேதங்களை ஒத புனித தீர்த்தம் கோபுரகலசங்களின் மீது ஊற்றினர். அதன் பின்பு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தங்க கோபுரகலசங்கள் எழுந்தருளுவிக்கப்பட்டு, கோவிலிலிருந்து கோவை நகர வீதிகளில், வீதிஉலாவாக வந்தது.  ராஜகோபுரத்தின் மேற்பகுதியில் கான்கிரீ்ட் அமைத்து கோபுரக்கலசங்கள் பொருத்த ஏதுவாக அமைக்கப்பட்டிருந்தது.  கிரேன் மூலம் ராஜகோபுரக்கலசங்கள் கோபுரத்தின் கீழ் பகுதியிலிருந்து மேல் பகுதிக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு வரிசையாக ஒவ்வொரு கலசமாக ஸ்தாபிதம் செய்யப்பட்டது.  ஒன்பது கலசங்களும் ஸ்தாபிதம் செய்யப்பட்ட உடன். கலசங்களுக்கு மலர் மாலை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கலசங்களுக்கான கண்களை திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிவாச்சாரியார்கள் வேதங்களை ஜெபித்தனர். அதன் பின்னர் புனித தீர்த்தம் தௌிக்கப்பட்டு, கோபுரகலசங்களுக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !