தமிழகத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்!
விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக, தமிழகத்தில் சிலைகள் தயாரிப்பு துவங்கி, சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. மூலப்பொருட்கள் விலை உயர்வால், சிலைகளின் விலை, 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. வடமாநிலங்களில், விமரிசையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா, ஆகஸ்ட் 29ல், கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு, ஒரு வாரத்துக்கு முன் தமிழகம், மகாராஷ்டிரா மாநிலங்களில் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படுவது வழக்கம்.
தடைவிதிப்பு:விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், தமிழகத்தின் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் சிலை, தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மூலப் பொருளில், சிலைகள் தயார் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடைவிதித்துள்ளதால், கிழங்கு மாவு, களி மண்ணால் ஆன சிலைகள், அதிக அளவில் தயார் செய்யப்பட்டு வருகின்றன. அரை அடி முதல், 15 அடி உயரம் வரை, பல்வேறு அளவுகளில், விதவிதமான வடிவில் சிலைகள் தயாராகி வருகின்றன. விநாயகர், மயில், அன்னம், சிங்கம், புலி, யானை, பெருச்சாளி, சிறுத்தை என, பல்வேறு விலங்குகளில் அமர்ந்த, நின்ற நிலைகளிலும், மயில், அன்னப்பறவை உள்ளிட்ட பறவைகளில் பயணம் மேற் கொள்வது போன்றும் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
புதிய வரவாக...: சிவன், விஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட கடவுள்களின் மடியில், அமர்ந்த நிலையில் அருள் பாலிப்பது போலவும், புதிய வரவாக, மூன்று அரக்கர்களை வதம் செய்யும் விநாயகர், முருகன் மடியில் விநாயகர், ஆலிழை கண்ணன் தோற்றத்தில் விநாயகர், ரங்கநாதர் துயில் கொள்வது போன்ற விநாயகர் என, மாறுபட்ட வடிவங்களில் சிலைகள் தயாராகி வருகின்றன. கிழங்குமாவு, பேப்பர், சிமென்ட் பேப்பர், டிஸ்டம்பர், வாட்டர் கலர் ஆகியவற்றின் விலை உயர்வு, தொழிலாளர்களுக்கான சம்பளம் உயர்வு ஆகியவை காரணமாக, சிலைகளின் விலையை, 20 சதவீதம் வரை உயர்த்தி உள்ளனர். விலை உயரும்:கடந்த ஆண்டு, அரை அடி முதல், 15 அடி உயரம் கொண்ட சிலை, 60 ரூபாய் முதல், 12 ஆயிரம் ரூபாய் வரை, விற்பனையானது. தற்போது அதே அளவுள்ள சிலை, 80 ரூபாய் முதல், 1௫ ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. புதிய வரவான கிருஷ்ணன் தவழ்வது போல், விநாயகர் தவழும் நிலையில், உருவாக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. ஒரு அடி உயரம் கொண்ட சிலை, 800 ரூபாய் முதல், 1,000 ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை நெருங்கும் போது, மேலும் விலை உயரும் என, உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.