திருத்தணி முருகன் கோவிலில் 19ம் தேதி ஆடி கிருத்திகை விழா!
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை, தெப்பத் திருவிழா, வரும், 19ம் தேதி துவங்கி, 23ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா, வரும், 19ம் தேதி ஆடி அஸ்வினியுடன் துவங்குகிறது.மறுநாள் ஆடிப்பரணியும், 21ம் தேதி ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது.22ம் தேதி இரண்டாம் நாள் தெப்பத் திருவிழாவும், 23ம் தேதி மூன்றாம் நாள் தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. மலையடி வாரத்தில் உள்ள சரவணப்பொய்கை தெப்பத்தில், உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, 19ம் தேதி முதல், 21ம் தேதி வரை, 24 மணி நேரமும் தொடர்ந்து கோவில் நடை திறந்திருக்கும். ஆடிக்கிருத்திகை விழாவிற்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவதால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.