உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் திருத்தல வரலாறு புத்தகங்கள் தயார்!

கோவில்களில் திருத்தல வரலாறு புத்தகங்கள் தயார்!

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், புதிய திருத்தல வரலாறு புத்தகம், விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 38,481 கோவில்கள் உள்ளன. இதில், மூன்றாம் நிலை கோவில்களை தவிர, பிற கோவில்கள் அனைத்திலும், கோவில்களின் தொன்மை, வரலாறு மற்றும் பூஜை விவரங்களை பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், திருத்தல வரலாறு புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. இவை, நான்கு ஆண்டுகளாக அச்சிடப்படவில்லை. தி.மு.க., ஆட்சியில் அச்சிடப்பட்ட புத்தகங்களில், முதல்வரின் படம், அமைச்சர் விவரம் ஆகியவற்றை மறைத்தும், கிழித்தும் வினியோகம் செய்யப்பட்டது. அதனால், திருத்தல வரலாறு புத்தகம் தட்டுப்பாடு இருப்பதாக புகார் எழுந்தது. அதை அடுத்து, அனைத்து கோவில்களிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து, தலவரலாறு புத்தகங்களை தயார் செய்தனர். தமிழகத்தில் உள்ள சிறப்பு நிலை, முதல்நிலை, இரண்டாம் நிலை கோவில்களில் திருத்தல வரலாறு புத்தகம், தற்போது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள் அனைத்தும், முதல்வருக்கு விருப்பமான பச்சை நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளன. புத்தகத்தில், ஒரே ஒரு பக்கத்தில் மட்டும், முதல்வரின் படம் அச்சிடப்பட்டுள்ளது.

பிற பக்கங்களில், கோவில்களின் வரலாறு, பூஜை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் பக்கங்களின் அடிப்படையில், 10 ரூபாய் முதல், 30 ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது.இதே போல், மாவட்ட வாரியாக உள்ள கோவில்களின் விவரம் அனைத்தும் கணக்கெடுக்கப்பட்டு, மாவட்ட கோவில் கையேடு என்னும் புத்தகத்தை, அறநிலையத் துறை தயார் செய்து வருகிறது.இந்த புத்தகம், குறைந்த பட்சம், 100 பக்கம் முதல், 300 பக்கம் வரை, வடிவமைக்கப்பட்டு வருகிறது. புத்தகத்தின் விலை என்பது, 100 முதல், 500 ரூபாய் வரை, நிர்ணயம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக, அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றனர். அரசு அனுமதி கிடைத்த உடன், புத்தகத்தின் விலை குறிப்பிடப்பட்டு, அனைத்து கோவில்கள், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகங்களில், புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படும். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !