உலக அமைதி வேண்டி 127 கோ பூஜை!
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே கோகுலாஷ்டமியை முன்னிட்டும், உலக அமைதி வேண்டியும் நேற்று நடந்த 127 கோபூஜை விழாவை தவத்திரு ஸ்ரீலஸ்ரீ ஓங்காரநந்தா சுவாமிகள் துவக்கி வைத்தார். பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூரில் 127 அடி உயர ராம அனுமான் திருப்பணி நடக்கும் இடத்தில் ஸ்ரீ ராம அனுமான் தர்ம பரிபாலன அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ கோகுலாஷ்டிமியை முன்னிட்டும், உலக அமைதி வேண்டியும் 127 கோபூஜை விழா நடந்தது. அதையொட்டி ஸ்ரீ பட்டாபிஷேக சீதா ராமர், ஸ்ரீ ராம அனுமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் 1008 நெய் தீப வழிப்பாடு நடந்தது. அறக்கட்டளை நிர்வாகி செந்தமிழ்செல்வி தலைமை தாங்கினார். கோபூஜையை தவத்திரு ஸ்ரீலஸ்ரீ ஓங்காரநந்தா சுவாமிகள் துவக்கி வைத்தார். பு.முட்லூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராம அனுமான் தர்ம பரிபாலன அறக்கட்டளை நிறுவன அறங்காவலர் சீனு என்கிற ராமதாஸ் செய்திருந்தார்.