புனித ராக்கினி மாதா தேவாலய ஆண்டு விழாவில் வண்ணமயம்!
ஊட்டி : ஊட்டி புனித மோட்ச ராக்கினி மாதா தேவாலய ஆண்டு விழா வண்ணமயமாக நடந்தது. ஊட்டியில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட, பழமையான புனித மோட்ச ராக்கினி மாதா தேவாலயத்தின் 176 வது ஆண்டு விழா நடந்தது. கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து, ஆண்டுவிழா நாளன்று, காலை, 6:15 மணிக்கு, பாதிரியார் தலைமையில் திருப்பலியும், காலை 9:00 மணிக்கு, மறைமாவட்ட முதன்மை குரு அந்தோணிசாமி தலைமையில், கூட்டுப்பாடல் ஆடம்பர திருவிழா திருப்பலியும் நடந்தது. மாலை 3:00 மணிக்கு மலையாள திருப்பலி, மாலை 5:00 மணிக்கு, மறை மாவட்டத்தைச் சேர்ந்த புதிய குருக்களின் தலைமையில் திருப்பலி நடந்தது. பின், வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், மோட்ச ராக்கினி மாதா பவனியாக வலம் வந்தார். மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். நேற்று காலை 9:00 மணிக்கு திருப்பலியை தொடர்ந்து, கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.