சபரிமலைக்கு தேவையான நிதி ஒதுக்க தயார் சுற்றுலாத்துறை அறிவிப்பு!
சபரிமலை : ஆன்மிக சுற்றுலாவுடன் தொடர்புபடுத்தி சபரிமலைக்கு எவ்வளவு நிதி தேவைப்பட்டாலும் ஒதுக்க மத்திய அரசு தயாராக உள்ளது என மத்திய சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. சபரிமலையில் மண்டல மகரவிளக்கு சீசன் தொடங்க இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்ய அரசும், தேவசம்போர்டும் தயாராகி வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசும் தனது பங்குக்கு சபரிமலைக்கு தேவையான நிதி ஒதுக்க முன்வந்துள்ளது. இதற்காக மத்திய சுற்றுலாத்துறை செயலாளர் ஆனந்த்குமார், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரின் தனி செயலர் கே.கே.சிங் ஆகியோர் சபரிமலை வந்தனர். அவர்கள் பம்பையிலிருந்து சன்னிதானம் வரை வந்து பார்வையிட்டனர். அவர்களுடன் பத்தணந்திட்டை கலெக்டர் ஹரிகிஷோர் மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.
சபரிமலையில் முக்கியமாக செய்ய வேண்டிய பணிகள் பற்றி கலெக்டர் மற்றும் தேவசம்போர்டு முதன்மை பொறியாளர் ஜோளி உல்லாஸ், நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் ஆகியோர் அவர்களிடம் விளக்கினர். ஆன்மிக சுற்றுலா மையத்தில் சபரிமலை உட்படுத்தி 130 கோடி ரூபாய் செலவிடலாம் என்று தெரிவித்த செயலர்கள் முதற்கட்டமாக ஐந்து கோடி ரூபாய் செலவிலான திட்டங்களுக்கும், இரண்டாவது கட்டமாக 15 கோடி ரூபாய் செலவிலான திட்டங்களுக்கும் மதிப்பீடு தயாரித்து அனுப்பினால் அதற்கு உடனடியாக பணம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் இதற்கு செயலரே அனுமதி வழங்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.