விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக விரதம் துவங்கிய தொண்டர்கள்
திருப்பூர் : விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருப்பூரில் இந்து முன்னணி தொண்டர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர். திருப்பூரில், இந்து முன்னணி சார்பில், 27வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 29 முதல் 31 வரை கொண்டாடப்படுகிறது. 750 இடங்களில்,விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, விநாயகர் சிலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்து முன்னணி சார்பில், தொண்டர்கள் இடையே ஆன்மிகம் மற்றும் நல்லொழுக்கத்தை உணர்த்தும் வகையில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக மாலை அணிந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில், ஏராளமான தொண்டர்கள், மாலை அணிந்து விரதத்தை துவங்கினர். இந்நிகழ்ச்சி, வரும் 29 வரை நடைபெற உள்ளது. மாநில நிர்வாககுழு உறுப்பினர் கிஷோர் குமார் கூறுகையில், ""விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, 2,000க்கும் மேற்பட்டோர் மாலை அணிந்து விரதம் துவங்க உள்ளனர். இனி வரும் ஆண்டுகளில், மாலை அணியும் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், என்றார்.மாநில பொது செயலாளர் சுப்ரமணியம், நிர்வாககுழு உறுப்பினர் தாமு வெங்கடேஷ், கோட்ட பொது செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொது செயலாளர்கள் கேசவன், பாஸ்கரன், கிருஷ்ணன், முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.