உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வருதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

வருதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

நாமக்கல்: நைனாமலை வருதராஜ பெருமாள், சென்றாய பெருமாள் கோவிலில், ஆகஸ்ட், 27ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.நாமக்கல் அடுத்த, புதன் சந்தை அருகே நைனாமலையில், 2,600 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் வருதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், பல்லவர் மன்னரால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.கோவிலின் சில பகுதிகள், திருமலை நாயக்கரின் தம்பி ராமச்சந்திர நாயக்கர் கட்டியதற்கான சான்றுகள் உள்ளன. அடிவாரத்தில் இருந்து மலைப்பாதை வழியாக 3,360 படிகளை கடந்து சென்றால் மட்டுமே நின்ற நிலையில், வீற்றிருக்கும் குவலயவல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாளை தரிசிக்க முடியும்.மலைப்பாதையில் வற்றாத ஊற்றுகளான "அரிவாள் பாழியும் மற்றும் "அமையா தீர்த்தம் எனும் "பெரிய பாழியும் அமைந்துள்ளது, இக்கோவிலின் சிறப்பு. மலை உச்சியில் உள்ள, 120 அடி உயரம் கொண்ட ஒரே பாறை மீது, இக்கோவில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.திருப்பணி முடிவடைந்ததை தொடர்ந்து, வருதராஜ பெருமாள் சன்னதி, மூலஸ்தானம், மகா மண்டபம், விமானம், விநாயகர், ஆஞ்சநேயர், ராமானுஜர், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், கருடாழ்வார், சென்றாய பெருமாள், 11 அடி உயரமுள்ள திருக்கொடி கம்பம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, ஆகஸ்ட், 27ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.

விழாவை முன்னிட்டு, இன்று (ஆக., 25) காலை, 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்குகிறது. காலை, 10 மணிக்கு புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வந்த தீர்த்தக்குடம், திருமலைப்பட்டி பழைய மாரியம்மன், பெருமாள் கோவிலில் இருந்து அழைத்து வரப்படுகிறது.மாலை, 5.30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, கும்ப அலங்காரம், முதல் கால வேள்வி பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை காலை, 8 மணிக்கு விசேஷ சாந்தி, பகல், 12 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், கோபுர கலசம் வைத்தல், இரவு, 8.30 மணிக்கு தேவ பாராயணம் நடக்கிறது.ஆகஸ்ட், 27ம் தேதி காலை, 8 மணிக்கு கடம் புறப்பாடு, காலை, 9.10 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத நைனாமலை வருதராஜ பெருமாள், பக்த ஆஞ்சநேயர், விநாயகர், கருடாழ்வார், சென்றாய பெருமாள், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், ராமானுஜர், மூலவர் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !