மதுரை மீனாட்சி கோயிலில் ரூ.1.70 கோடியில் புனரமைப்பு பணி!
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளம் தெற்கு மேற்கூரை பிரிக்கப்பட்டு ரூ.ஒரு கோடியே 90 லட்சத்தில் புனரமைப்பு பணிகள் நடக்கின்றன. கிழக்கு மேற்கூரை புனரமைப்பு பணிகள் ரூ.ஒரு கோடியே 70 லட்சத்தில் துவங்கவுள்ளன. இக்கோயில் பொற்றாமரைக்குளம் 165 அடி நீளம், 120 அடி அகலம் கொண்டது. இங்கு நிரந்தரமாக தண்ணீர் தேக்க இயலவில்லை. சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் ரவீந்தரகட் தலைமையில் பொறியாளர்கள் தள ஆய்வு செய்தனர். முப்பது ஆண்டுகளுக்கு முன் பொற்றாமரை குளத்தின் தரை தளத்தில் பதிக்கப்பட்டிருந்த பட்டியல் கற்கள் மற்றும் சிமென்ட் கான்கிரீட் அகற்றப்பட்டது. அதற்கு பதில் இரண்டு அடி ஆழத்திற்கு களிமண் நிரப்பி 2012 அக்., முதல் தண்ணீர் தேக்கப்படுகிறது. தற்போது வரை தண்ணீர் வற்றாமல் பொலிவுடன் காட்சியளிக்கிறது. இக்குளத்தின் தெற்கு மேற்கூரை பழுதானது. மேற்கூரை கற்களை அகற்றி விட்டு புதியவை பதிக்கும் பணி ரூ.ஒரு கோடியே 90 லட்சத்தில் 70 சதவீதம் முடிக்கப்பட்டது. இதையடுத்து கிழக்கு மேற்கூரையின் 36 கற்கள் அகற்றப்பட்டு ரூ.ஒரு கோடியே 70 லட்சத்தில் பணிகள் துவங்கவுள்ளன. இறுதியாக வடக்கு மற்றும் மேற்கு மேற்கூரை புனரமைப்பு பணிகள் துவங்கும்.