காசிவிஸ்வநாதர் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை!
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, புதிய கொடிமரம் பிரதிஷ்டை நடந்தது. கோயில் சுவாமி சன்னதிகள், கோபுரங்கள், சுற்றுப் பிரகாரங்கள், மாடங்கள் அனைத்தும் பக்தர்களால் பலலட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. அதற்கான மண்டல பூஜை நிறைவு விழா , புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா நடந்தது. முதல்நாள் 48 வது மண்டல பூஜை சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இதில் பூரணகும்பம் வைத்து யாகபூஜைகள் நடந்தன. காசிவிஸ்வநாதர், விசாலாட்சியம்மன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், கன்னிவிநாயகர், நீலகண்டேஸ்வரர், வக்கிரகங்கள், காலபைரவர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜிக்கப்பட்ட கும்பநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பநீர் அபிஷேகம் நடந்தது. சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடந்தது.