ரயிலடி விநாயகர் கோவிலில் கர்நாடக இசைக் கச்சேரி!
விழுப்புரம்: விழுப்புரம் ரயிலடி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழுப்புரம் ரயிலடி விநா யகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 29ம் தேதி துவங்கியது. அன்று காலை அன்னதான நிகழ்ச்சியை டாக்டர் லட்சுமணன் எம்.பி., துவக்கி வைத்தார். அன்று இரவு நடராஜா நாட்டியாலயா மாணவ, மாணவிகளின் இசை நிகழ்ச்சி நடந்தது. 30ம் தேதி மாலை தெம்மாங்கு பாடல்கள் மற்றும் கிராமிய நடன நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 31ம் தேதி மாலை நாகம்மன் வளையல் விழா மற்றும் தர்ஷிணி இசை பயிலக மாணவ, மாணவிகளின் கர்நாடக இசை கச்சேரியும் நடந்தது. பங்கேற்ற மாணவிகளுக்கு நகர கூட்டுறவு வங்கி தலைவர் சுப்ரமணியன் பரிசளித்தார். கவுன்சிலர் வேங்கடபதி வரவேற்றார். விழாக்குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் ரகுநாதன், முன்னாள் கவுன்சிலர் ரகுபதி, மங்களம் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.