கோயிலில் யானை வளர்க்க தடை கோரி வழக்கு!
மதுரை : கோயில்கள், வீடுகளில் யானைகள் வளர்க்க தடை விதிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை வில்லாபுரம் சரவணன் தாக்கல் செய்த பொது நல மனு: வனத்தில் யானைகள் உணவு தேடி தினமும் 18 மணி நேரம் நடக்கின்றன. அவைகள் 60 முதல் 75 வயது வரை வாழக்கூடியவை. இயற்கையான சூழ்நிலையில் வளர்ந்தால், 60 வயதுவரை வாழும். 1986 லிருந்து ஆசிய யானைகளின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளது.இயற்கைக்கு மாறாக யானைகளை கோயில்கள், வீடுகளில் கான்கிரீட் தளங்களில் கட்டிவைத்து வளர்க்கின்றனர். இந்தியாவில் யானையை பிடித்து பழக்குவது, வணிக ரீதியாக பயன்படுத்துவது தொடர்கிறது. அதிகாரிகள் கண்காணிப்பதில்லை.
குடும்பமாக வாழக்கூடிய இயல்புடைய யானைகள் கோயில்களில் தனியாக வாழ்வதால், உடல், மன ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது. யானைகள், குட்டிகளுக்கு 10 வயது வரை பால் கொடுக்கும். ஆனால், குட்டிகளை பிரித்து பயிற்சி என்ற பெயரில் துன்புறுத்துகின்றனர். தினமும் 10 கி.மீ.,நடக்க வேண்டிய யானைகளை, நகரங்களில் நடக்க அனுமதிப்பதில்லை.உடலை திருப்ப முடியாமல், குறுகிய கட்டடத்திற்குள் அடைத்து வைக்கின்றனர். கோயில் திருவிழாக்களின் போது ஊர்வலத்தில் அழைத்துச் செல்கின்றனர். கனமான பொருட்கள் மூலம் நெற்றியில் அலங்காரம் செய்கின்றனர். சரியாக
உணவளிக்காமல் வெயிலில் நடக்க வைக்கின்றனர். திருவிழா மற்றும் சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் இவ்வாறு செய்கின்றனர். இதனால் யானைகள் மிரண்டு, மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. சர்வதேச இயற்கை பாதுகாப்பு நிறுவன புள்ளிவிபரப்படி, ஆசிய யானைகள் அழிவின் விளிம்பில் உள்ளன. பாதுகாப்பது அவசியம்.யானை, தேசிய பாரம்பரிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய யானைகள் வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருகின்றன.கோயில்கள், தனியார் வீடுகளில் யானைகள் வளர்க்க தடை விதிக்க வேண்டும். அவற்றை மீட்டு முதுமலைக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும். கோயில்கள், வீடுகளில் யானைகள் வளர்க்க உரிமம் வழங்க, வனத்துறைக்கு தடை விதிக்க வேண்டும், என குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் லஜபதிராய் ஆஜரானார்.தமிழக உள்துறை செயலாளர், வனத்துறை முதன்மைச் செயலாளர், அறநிலைத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.