பழமையான ஓலை சுவடிகள் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைப்பு!
திண்டிவனம் : திண்டிவனத்தில் கிடைத்த, 300 ஆண்டுகள் பழமையான ஓலைச் சுவடிகள், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், கிடங்கல் கோட்டை, முத்துகிருஷ்ணன் தெருவில் வசிப்பவர்கள் பார்த்தசாரதி, 69, அவரது தம்பி பத்மநாபன், 65. ஆறு தலைமுறையாக கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில், பழமையான நெற்குதிரில் ஓலைச்சுவடி கிடைத்தது. அதை, பார்த்த சாரதியின் தந்தை திருநாவுக்கரசு பத்திரப்படுத்தி வைத்திருந்தார். இவர்களது மூதாதையர்கள், சித்த மருத்துவ சேவை செய்தனர். இந்த ஓலைச் சுவடிகளில் இருந்து சரியான தகவல்களை பெற முடியாததால் அப்படியே வைத்திருந்தனர். பத்மநாபனின் மனைவி பத்மாசினி, தாகூர் பெண்கள் கல்லூரி துணை முதல்வராக உள்ளார். இவரது முயற்சியால், சென்னை, தரமணி, தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு, ஓலைச்சுவடிகள் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது.
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன உதவி பேராசிரியர் தாமரைபாண்டியன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் ராஜேஷ் ஆகியோர் பார்த்தசாரதியின் வீட்டிற்கு வந்தனர். அவர்களிடம் இருந்த பழமையான ஓலைச் சுவடிகளைப் பெற்றுக் கொண்டனர். இவற்றை ஆய்வு செய்த தாமரை பாண்டியன் கூறியதாவது: சிவபெருமானின் புராணம் உள்ளிட்ட பக்தி இலக்கியங்கள், சித்த மருத்துவ குறிப்புகள் அடங்கிய பல ஓலைச்சுவடிகள் உள்ளன. இவை, 300 ஆண்டு களுக்கு முற்பட்டவை. சில, செல் அரித்து உள்ளன. இவற்றை, லெமன் கிராஸ் ஆயில் மூலம் சுத்தப்படுத்தி பூச்சிகள் நீக்கி, இதில் உள்ள கூட்டு எழுத்துகளை ஆய்வு செய்ய உள்ளோம். பல அரிய தகவல்கள், மருத்துவ குறிப்புகள் கிடைக்க பெறலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.